ஆட்டோக்களின் உரிமம் ரத்து

அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-18 20:45 GMT

பொள்ளாச்சி

அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை சில பெற்றோர்கள் ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்றனர். அப்போது ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி குழந்தைகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர். சில டிரைவர்கள் தங்களது அருகில் குழந்தைகளை அமர வைத்து செல்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார்.

உரிமம் ரத்து

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்டோக்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் 5 பேரையும், அதற்கு மேல் வயதுடைய குழந்தைகளாக இருந்தால் 3 பேரையும்தான் ஏற்றி செல்ல வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கதவு பகுதியில் போர்டு வைக்க வேண்டும். டிரைவர்கள் தங்களது அருகில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்ட கூடாது. மேலும் ஆட்டோ ஓட்டும் போது உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அடிக்கடி முக்கிய சாலைகள், பள்ளிகள் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அப்போது விதிமுறையை மீறி ஆட்டோக்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமுறையை மீறினால் கோவை மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்று ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

கண்காணிக்க வேண்டும்

குழந்தைகளை ஏற்றி செல்லும் போது கவனமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தும் செல்ல வேண்டும். குழந்தைகள் ஆட்டோவில் பாதுகாப்பாக செல்கிறார்களா? என்பதை பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்