தேர்தல் பத்திரம் ரத்து- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நன்றி.. திருமாவளவன் அறிக்கை

இந்திய தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்த தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-16 03:35 GMT

சென்னை,

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது. எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

இந்திய தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியதுபோலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்