ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து
தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்தும் ஆவின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.;
ஆவின் நிறுவனம்
வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றப்பட்டு முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 6-ந் தேதி அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரே பதிவு எண்ணில் 2 வேன்கள் ஆவின் நிறுவன வளாகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு வேனுக்கு போதிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து இரு வேனையும் பறிமுதல் செய்து வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் வாகன உரிமையாளர் மற்றும் ஆதவாளர் அங்கு வந்து அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்துச் சென்றார்.
இதுதொடர்பாக வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சிவக்குமார் மற்றும் அவரது டிரைவர் விக்கி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்தநிலையில் ஆவினில் உள்ள பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததாரரிடம் ஆவின் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில், ஒரே பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் இயக்கியதை கண்காணிக்க தவறியது ஏன்?, பறிமுதல் செய்து வைத்த வாகனத்தை ஆவின் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்து செல்ல அனுமதித்தது யார்?, உள்ளிட்ட விவரங்களுடன் பணியில் குறைபாடு இருந்ததாலும் தங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வருகிற 12-ந் தேதிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ரத்து
மேலும் இந்த பிரச்சினையில் சிக்கிய 2 வேன்கள் அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய வழிதடத்தில் இயக்கப்பட்டு வந்தது. எனவே இரு வாகன ஒப்பந்தத்தையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் ஆவின் தரப்பில் உள்ள அரசு வாகனத்திலேயே பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, தாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் ஆவினில் பால் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் இயக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.