நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

நிலக்கரி சுரங்கம் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-04-08 21:47 GMT

கோப்புப்படம்

சென்னை,

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கு காலங்கடந்து தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. கவன ஈர்ப்பை கொண்டு வந்தது.

இந்தநிலையில் மத்திய சுரங்கத்துறை துறை மந்திரி தமிழ்நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டுவதை கைவிடுவதாக அறிவித்தது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அ.தி.மு.க. வெற்றியாகும். இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய நிலக்கரி திட்டங்களை ஏலப்பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தி இருப்பதாக மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி இருக்கிறார். அவ்வாறு அவை நீக்கப்பட்டால் மகிழ்ச்சி. இத்திட்டங்கள் கைவிடப்பட்டால் அது பா.ம.க.வின் வெற்றி.

அதேபோல் என்.எல்.சி. மூன்றாம் சுரங்கம், வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரி திட்டத்தையும் கைவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 3 திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி. மூன்றாம் சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்தி தர மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று தே.மு.தி.க. தொடர்ந்து போராடி வந்தது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் போராடியது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், 'தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் விதமாக நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்திருப்பது நன்றிக்குரியது' என்று கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்,

'சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைய இருப்பது ரத்து செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது' என்று குறிப்பிட்டு உள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு அடி பணிந்து திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியிருக்கும் பா.ஜ.க. அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது. இது மண்ணின் மக்களுக்கு கிடைத்த வெற்றி' என்று கூறியுள்ளார்.

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் வரவேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்