ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து: உள்துறை செயலாளர் உத்தரவு
தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவு வெளியாகியிருந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர், எஸ்.வெள்ளத்துரை. இவர், தமிழக போலீஸ்துறையில் 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ்.வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். இதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அந்த சிறப்பு படையிலும் வெள்ளத்துரை முக்கிய பங்கு வகித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதே போன்று இவர், திருச்சி, மதுரையில் பணியாற்றிய போது ரவுடிகள் என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, வெள்ளத்துரை சப்-இன்ஸ்பெக்டராகவே பணியாற்றினார். வீரப்பனை வீழ்த்திய அதிரடி படைக்குழுவில் இடம் பெற்றிருந்த போலீசார் அனைவரும் பதவி உயர்வு பெற்றனர்.அப்போது சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளத்துரை இரட்டிப்பு பதவி உயர்வு பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
தமிழக போலீஸ்துறையில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்த வெள்ளத்துரை நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவரை நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலின் போது மர்மமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். அந்த வழக்கு முடிவடையாத நிலையில் அதில் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.