வரதராஜபுரம் ஊராட்சியில் மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைப்பு
வரதராஜபுரம் ஊராட்சியில் கால்வாயின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள புவனேஸ்வரி நகர் சாலை பகுதியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள கால்வாயின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே சிமெண்டு கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஊராட்சிகளில் மழைநீர், கழிவுநீர் செல்வதற்கு கட்டப்பட்டுள்ள கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாயின் நடுவில் மின்கம்பம் உள்ளதால் மழைநீர், கழிவு நீர் செல்ல முடியாமலும் குப்பை கழிவுகள் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு சிமெண்டு கால்வாயில் கழிவுநீர் தேங்கி மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும் கால்வாய் அமைக்கும் போது ஒன்றிய என்ஜினீயர்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கினால் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது
அதிகாரிகளின் அலட்சியமே மின்கம்பத்தின் நடுவில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.