ஆபாசமா விடிய விடிய வீடியோ கால்...: "அண்ணனு சொல்லி இந்த மாதிரி பண்ணலாமா? ரவீந்திரநாத் எம்.பி. மீது இளம்பெண் பரபரப்பு புகார்
ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
தேனி,
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த காயத்ரி தேவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், வாட்ஸ் அப் காலில் அழைத்து தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் திருமணம் செய்துகொள்வதாக கூறி தகாத முறையில் பேசியதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து ரவீந்திரநாத்தின் மனைவியிடம் தாம் முறையிட்டதாகவும் மேலும், தன்னிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக ரவீந்திரநாத் மன்னிப்பு கேட்காவிட்டால் ஊடகங்களில் நடந்ததை கூறுவேன் எனக் கூறியதால் தமக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதாகவும் காயத்ரி தேவி தெரிவித்தார்.
குடும்ப நண்பர்களாக கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தாம் ரவீந்திரநாத் குடும்பத்துடன் பழகி வந்ததாகவும் சொந்த அண்ணனை போல் ரவீந்திரநாத்தை நினைத்து வந்ததாகவும் காயத்ரி தேவி தெரிவித்தார்.
ரவீந்திரநாத் குடும்பத்து பெண்களிடம் இது போல் யாராவது பேசினால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்றும் சாதாரண வீட்டு பெண்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா எனவும் காயத்ரி தேவி கேள்வி எழுப்பினார்.
மேலும், ரவீந்திரநாத் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தும் பிள்ளைகளுக்காக அவரது மனைவி பொறுமை காத்து வருவதாக காயத்ரி தேவி கூறினார்.
வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வரச் சொன்னதற்கான ஆதாரங்களும், நள்ளிரவை கடந்து வாட்ஸ் அப்பில் தனக்கு அவர் அழைத்து பேசியதற்கான ஆதாரங்களும் உள்ளதாக கூறியிருக்கிறார்.
ரவீந்திரநாத்தின் செயல்பாடு பற்றி அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் தாம் முறையிட்டதாகவும் ஆனால் தமது பேச்சை கேட்கும் நிலையில் மகன் இல்லை எனச் சொல்லிவிட்டார் எனவும் காயத்ரி தேவி கூறினார்.
மொத்தத்தில் ரவீந்திரநாத் எம்.பி. மீதான பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.