ஹைட்ராலிக் லிப்ட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தயாராகும் அரசியல் தலைவர்களின் பிரசார வாகனங்கள்
கோவையில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக துல்லிய ஒலி அமைப்புகள், எலெக்ட்ரிக் கழிப்பறை, எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.;
கோவை
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக கோவையில் பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
கோவையில் தான் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உள்ளிட்டோரின் பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இங்கு சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த வாகனங்களில் சுழலும் இருக்கைகள், வேனின் மேற்கூரை வழியாக தலைவர்கள் அமர்ந்தப்படி பேச வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்படுகிறது. வேனை சுற்றிலும் எல்.இ.டி. விளக்குள், தலைவர்கள் பேசுவதை தொண்டர்கள் கேட்கும் வகையில் துல்லிய ஒலி அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்கு முன்பு உள்ள பிரசார வாகனங்களில் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டன. தற்போது எலக்ட்ரிக் கழிப்பறைகள் பொருத்தப்படுகின்றன. பிற மாநில தலைவர்கள் கூட தங்களது பிரசார வாகனத்தை கோவையில் தயார் செய்யவே ஆர்வம் காட்டுகிறார்களாம்.