சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பலியானதை தொடர்ந்து, 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.;
ஊட்டி,
ஊட்டி அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பலியானதை தொடர்ந்து, 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
சிறுமி பலி
நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (வயது 4) தேயிலை தோட்டத்தில் நின்றிருந்தாள். அப்போது சிறுத்தை தாக்கியதில் சரிதா படுகாயம் அடைந்தாள். அவளை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மைனலா காப்புக்காடு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கேமராக்கள் பொருத்தம்
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் தோட்டங்களுக்கு சென்று பச்சை தேயிலை பறிக்க அச்சத்துடன் சென்று வருகின்றனர். தொடர்ந்து சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில் தேயிலை தோட்டம் பகுதியில் வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். அப்போது சிறுத்தை நடமாடினால், கேமராவில் பதிவாகும் வகையில் ஒத்திகை பார்த்து பொருத்தினர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்தும், வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பது குறித்தும் வனத்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.