18 ஒட்டகங்களை ராஜஸ்தானுக்கு அனுப்ப முடிவு
ஓசூர் பகுதியில் மீட்கப்பட்ட 18 ஒட்டகங்களை ராஜஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
ஓசூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒட்டகங்களை அதிக அளவில் அழைத்து வந்து பக்ரீத் பண்டிகைக்கு இறைச்சிக்காக வெட்டுவதற்கு, ஓசூர் பகுதியில் அடைத்து வைத்து, உணவு மற்றும் தண்ணீர் வழங்காமல் சித்திரவதை செய்து வருவதாக டெல்லியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சய் குல்கர்னி என்பவர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த கோவிந்த் பர்வா என்பவரும் அவருடன் சிலரும் 18 ஒட்டகங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஓசூர் பகுதியில் 3 ஒட்டகங்களை வைத்து சவாரி செய்யும் தொழில் செய்து வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் ஒட்டகங்களை வைத்து தொழில் செய்ய கெடுபிடி ஏற்பட்டதால் அதிகளவில் ஒட்டகங்களை இங்கு வரவழைத்து நாங்கள் பராமரித்து வருகிறோம், மேலும், நாங்கள் இந்துக்கள், ஒட்டகங்களை இறைச்சிக்காக வெட்ட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 18 ஒட்டகங்களை மீட்டனர். பின்னர் அந்த ஒட்டகங்களை ஓசூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ஒட்டகங்கள் அனைத்தும் ஓசூர் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஒட்டகங்கள் அனைத்தும், பெங்களூருவில் உள்ள கோசாலை வசம் ஒப்படைத்து, அங்கிருந்து இன்னும் ஒருசில நாட்களில் ராஜஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் செய்துள்ளனர்.