2023-ம் ஆண்டுக்கான காலண்டர்கள் இன்று வெளியீடு

காலண்டர் தொழில் பல்வேறு வரி உயர்வுகளால் கடும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்கான காலண்டர்கள் சிவகாசியில் இன்று வெளியிடப்படுகிறது.

Update: 2022-08-02 20:13 GMT

சிவகாசி,

காலண்டர் தொழில் பல்வேறு வரி உயர்வுகளால் கடும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்கான காலண்டர்கள் சிவகாசியில் இன்று வெளியிடப்படுகிறது.

காலண்டர் தொழில்

பட்டாசு போன்று சிவகாசியில் மற்றொரு முக்கிய தொழில் காலண்டர் உற்பத்தி ஆகும். கடந்த 60 ஆண்டுகளாக சிவகாசியில் சுமார் 150 அச்சகங்கள் காலண்டர்கள் மற்றும் டைரிகளை மட்டும் அச்சடித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த தொழில் மூலம் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். காலண்டர் உற்பத்திக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக காகிதம், அட்டை, அச்சு மை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளன.

இதனால் ஒரு குறிப்பிட்ட விலையை காலண்டருக்கு நிர்ணயிக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள். தற்போது நிர்ணயிக்கப்படும் விலையும் வருகிற டிசம்பர் மாதம் வரை இருக்காது என்றும், அதற்குள் விலை நிச்சயம் உயர வாய்ப்பு இருப்பதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிசைன்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதியன்று (ஆடிப்பெருக்கு) காலண்டர் நிறுவனங்கள் தங்களது புதிய டிசைன்களை மொத்த வியாபாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களிடம் இருந்து மொத்த ஆர்டர் பெறுவது வழக்கம். இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால், சிவகாசியில் உள்ள பல நிறுவனங்கள் 2023-ம் ஆண்டுக்குரிய புதிய காலண்டர்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளன. அதே நேரத்தில் விலையும் நிர்ணயித்து கூற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்