நிதி ஒதுக்கீடு தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படும்
நிதி ஒதுக்கீடு தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படும் என மத்திய மந்திரி வி.கே. சிங் கூறினார்.
திருப்புவனம்
நிதி ஒதுக்கீடு தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படும் என மத்திய மந்திரி வி.கே. சிங் கூறினார்.
கீழடியை பார்வையிட்டார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தை மத்திய இணை மந்திரி வி.கே.சிங் நேற்று பார்வையிட்டார். அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி பார்த்து பழங்கால பொருட்களின் விவரம், தன்மையை குறித்து கேட்டறிந்தார். அதன் பின்பு கொந்தகை அகழாய்வு தளத்திற்கு சென்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டார். அவருக்கு கீழடி அகழாய்வு பிரிவு இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி விளக்கி கூறினார்கள். பின்பு நிருபர்களிடம் வி.கே. சிங் கூறியதாவது:-
சிந்து சமவெளி நாகரிகம்
அகழாய்வு நடந்த மிகவும் தொன்மையான இடம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு நான் வந்திருப்பது இந்தியா எவ்வளவு பழமையான நாகரிகம் கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் மற்றும் அகழாய்வு இடங்கள் மிகவும் தொன்மையானது. அப்போதைய காலத்திலேயே நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவியல் பூர்வமாக முன்னேற்றமும் திறமையும் கொண்டிருந்துள்ளார்கள் என்பதை உணரும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இவைகள் ஏறத்தாழ சிந்து சமவெளி நாகரிக காலத்தை சேர்ந்தது. ஏனெனில் இதே போன்று பழங்கால பொருட்கள் அங்கேயும் கண்டறியப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கை நிதி ஒதுக்கீட்டில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு உரிய பதில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அருங்காட்சியகத்தில் கீழடி வரலாறு குறித்து திரையில் காட்டப்பட்டதை ஆர்வத்துடன் பார்த்தார்.
அப்போது முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சோழன். சித. பழனிச்சாமி, கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், சட்டமன்ற பொறுப்பாளர் சுரேஷ்குமார், திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவர் ராஜகதிரவன், மாவட்ட செயலாளர் மீனாதேவி மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.