ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்
தேனீக்கள் கொட்டியதில் உரிகம் கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் என்பவர் உயிரிழந்தார்.;
ஓசூர்,
ஓசூர் அருகே உள்ள உரிகம் பகுதியில் இருந்து கோவல்லி கிராமத்துக்கு செல்லக்கூடிய வழியில் பழமை வாய்ந்த மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமையும் அந்த பகுதி மக்கள் சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இன்று திங்கள்கிழமை என்பதால், அந்த சுற்று வட்டார கிராம மக்கள் மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
அப்போது ஒரு சிலர் அந்தப் பகுதியில் தீ மூட்டி அடுப்பு வைத்துள்ளனர். அதில் இருந்து வெளியேறிய புகையானது அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துள்ளது. அதில் இருந்து வெளியேறிய தேனீக்கள் அங்கிருந்த சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை துரத்தி துரத்தி கொட்டியது. தேனீக்களின் தாக்குதலில் உரிகம் கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் (56 வயது) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தேனீக்களின் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.