திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பலி

திட்டக்குடியில் ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்த பேட்டரி ஆட்டோவை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-26 18:45 GMT

திட்டக்குடி, 

தொழிலாளி

திட்டக்குடி பெருமுளை ரோட்டில் துரித உணவகம் (பாஸ்ட்-புட் ஓட்டல்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேபாள நாட்டை சேர்ந்த ஜீவன் பொன்மகர்(வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இவருடன் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் படுத்திருந்த தொழிலாளி ஜீவன் பொன்மகர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் மழையில் அவர் வீட்டின் ஓரமாக நடந்து சென்றார். அங்கு ஓட்டலுக்கு சொந்தமான பேட்டரியில் இயங்கக்கூடிய ஆட்டோவுக்கு 'சார்ஜ்' போடப்பட்டிருந்தது. அந்த ஆட்டோவை அவர் தொட்டபடி நடந்து சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜீவன் பொன்மகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

இது குறித்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மின்கசிவு காரணமாக 'சார்ஜ்' போடப்பட்டிருந்த ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்ததும், அதை அறியாத ஜீவன் பொன்மகர் மழையில் நனைந்த நிலையில் ஆட்டோவை தொட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜீவன் பொன்மகர் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்