கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும்

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.;

Update: 2022-12-12 18:22 GMT

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.

நலவாரியம்

கூட்டத்தில், தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் தலைவர் முரளி, பொருளாளர் கோபாலாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அதில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கான நலவாரியத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அன்லாக் நிலுவை தொகை கோரும் அறிவுப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஜூடோ போட்டி...

வேலூர் மாவட்ட ஜூடோ சங்கம் சார்பில் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஜூடோ விளையாட்டில் மாணவர்கள் அனைத்துநிலை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள். வேலூர் மாவட்ட ஜூடோ சங்கத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதிய பயிற்சி பெற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடு காரணமாக ஜூடோ போட்டியில் பங்குபெற முடியாத நிலை காணப்படுகிறது. அதனால் மாணவர்கள் உயர்மட்ட அளவிலான ஜூடோ போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. எனவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் கல்லூரிகளில் பயிலும் ஜூடோ மாணவர்கள் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

வேலூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த மாதம் ஆக்சீலியம் கல்லூரியில் நடைபெற்றது. அதில், அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் சான்றிதழ்களுடன் கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர் மழையின் காரணமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு குறைவான பொதுமக்களே மனு அளிக்க வருகை தந்தனர். அதனால் கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்