கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண டி.வி. சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள தனியார் சேனல் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் கேபிள் டி.வி. மாத கட்டணம் ரூ.500 வரை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. உழைக்கும் மக்களின் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தும் கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயல் ஆகும். எனவே இந்த சேனல்களின் விலையை உயர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அங்கப்பன் என்ற ராஜ், பொருளாளர் ஜின்னா மற்றும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.