ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம்: `கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம்'- எடப்பாடி பழனிசாமி பேச்சு
கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இறுதிகட்ட பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பி.பி.அக்ரஹாரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி பவானிரோடு, திருநகர்காலனி வழியாக கருங்கல்பாளையம் காந்திசிலை பகுதியில் பிரசாரத்தை முடித்து கொண்டார். அங்கு அவர் மக்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஏற்கனவே இந்த தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எதிர் அணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? வேட்பாளர் என்றால் உங்களது கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும். கே.எஸ்.தென்னரசு எளிமையானவர். அவர் உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று நிறைவேற்றி கொடுப்பார்.
சூப்பர் முதல்-அமைச்சர்
தி.மு.க. கடந்த 22 மாத ஆட்சி காலத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளி போட்டதில்லை. அவர்கள் மக்களுக்கு பட்டா வழங்கியதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியிலும் 24 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மேலும் பட்டா மாறுதல் செய்து கொடுத்திருக்கிறோம் ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் எங்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி ரூ.81 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் வணிக வளாகங்கள், மேம்பாலம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொங்கல் பண்டிகையின்போது நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கினோம். அப்போது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அதே அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ரூ.1,000 மட்டுமே வழங்கினார். மேலும் பல்வேறு அறிக்கை வெளியிட்ட பிறகு தான் முழு கரும்பு வழங்கப்பட்டது. எனவே ஏழை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் இந்த அரசு செய்தது கிடையாது. திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மானியம் போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதற்கு தான் இந்த சூப்பர் முதல்-அமைச்சர் இருக்கிறார்.
கோடநாடு வழக்கு
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. போதை பொருட்கள் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு அ.தி.மு.க. அரசு எப்போதும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. கல்வி, வேலை வாய்ப்புக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தரப்பட்டது. ரம்ஜான் நோன்பின்போது 5 ஆயிரத்து 518 டன் அரிசி வழங்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி பதவிக்கு அப்துல்கலாம் நின்றபோது நானும், கே.எஸ்.தென்னரசும் ஓட்டுப்பதிவு செய்து உள்ளோம். அதேசமயம் இன்று காலையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறிச்சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்துல்கலாமுக்கு எதிராக வாக்களித்தார்.
கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கும், கோடநாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை முயற்சி தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்து வெளியே எடுக்க தி.மு.க.வை சேர்ந்தவர் உதவினார். இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. ஒருவர் ஆஜராகிறார். அப்படியென்றால் இந்த வழக்குக்கும், தி.மு.க.வுக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். கோடநாடுவழக்கு என்று இனியும் பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
நீட் தேர்வு
தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாததுதான் திராவிட மாடலா? நாங்கள் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால், நெஞ்சை நிமிர்த்து வந்து ஓட்டு கேட்கிறோம். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். அதை நம்பி ஏழை மாணவ-மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்காமல் இருந்தனர். இதனால் தேர்ச்சி பெற முடியாமல் 12 பேர் தற்கொலை செய்தனர். அனிதா என்ற ஒரு மாணவி தற்கொலை செய்தபோது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும், கூட்டணி கட்சியினரும் எப்படியெல்லாம் பேசினார்கள். தற்போது 12 பேரின் தற்கொலைக்கு கூட்டணி கட்சியினர் எதுவுமே பேசவில்லை. ரூ.1,000 உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கணக்கெடுக்கும் பணி நடப்பதாக கூறினார். எனவே பொய்யான வாக்குறுதிகளை அளித்த அந்த கூட்டணிக்கு இந்த இடைத்தேர்தலில் தோல்வி என்ற தண்டனையை கொடுக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்தபோது ஒரு முறை ஆளும் கட்சி அ.தி.மு.க. என்று கூறினார். அவருக்கே தெரிந்துவிட்டது, அ.தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது என்று. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களைத்தான் அவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார். கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்தை வைக்க வேண்டுமென்றால் அவரது நினைவிடத்தில் ரூ.2 கோடி செலவில் வைத்து கொள்ளலாம். ரூ.81 கோடி செலவில் கடலில் வைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாம். மீதமுள்ள ரூ.79 கோடி செலவில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம். மு.க.ஸ்டாலினுக்கு நாட்டு நடப்பு தெரியாது. அவரது வீட்டு நடப்பு மட்டும்தான் தெரியும். ஊழல் ஊற்றுக்கண் தி.மு.க.
வாக்காளர்கள்
முதல்-அமைச்சர் அறிவித்த 520 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மக்கள் சார்பாகதான் நான் பேசினேன். எனவே வாக்காளர்கள், மக்களை பாா்த்துதான் அவர் கண் தெரியாத கபோதி என்று கூறி உள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த பிரசாரத்தின் போது வழி எங்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பெண்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் யுவராஜா, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.