ஈரோடு கிழக்்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ருசிகரம்; விதவிதமாக வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்- செருப்புமாலை அணிந்தும், மீன் தூண்டிலுடனும் வந்தார்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செருப்பு மாலை அணிந்தும், மீன் தூண்டிலுடனும் விதவிதமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.;

Update: 2023-01-31 20:22 GMT

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செருப்பு மாலை அணிந்தும், மீன் தூண்டிலுடனும் விதவிதமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.

செருப்பு மாலை

இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு காலையிலேயே பலர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகமது (வயது 63) என்பவர் செருப்புகளை மாலையாக அணிந்துகொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் மஞ்சள் நிற துண்டை கழுத்தில் அணிந்தும், பச்சை நிற துண்டை தலைப்பாகையாக கட்டிக்கொண்டும் வந்திருந்தார்.

அப்போது அவர், "நல்லவர் வீட்டில் நாயாய் உழைப்பேன், செருப்பாய் தேய்வேன்" என்பதை உணர்த்துவதற்காக செருப்பு மாலை அணிந்துகொண்டு வந்ததாக தெரிவித்தார். மேலும், "மக்கள் காசுக்காக ஓட்டை விற்கக்கூடாது. விலை போகக்கூடாது. நல்லவரை தேர்ந்தெடுத்து ஓட்டுப்போட வேண்டும்", என்று கூறினார். இதுவரை அவர் 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பம்

மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி (45), மகள் சத்யா (24) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்கள்.

இதுகுறித்து மாரியப்பன் கூறும்போது, "நான் காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவியும் துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பட்டப்படிப்பு முடித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்ய வந்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கிறரோ? அதில் போட்டியிட தயாராக உள்ளோம். மக்களிடம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம்", என்றார்.

தூண்டில்

மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன் (38) என்பவர் கையில் தூண்டிலுடன் மனுதாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரது கையில் இருந்த பதாகையில், " ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிப்போம். வாக்களிப்பது ஜனநாயக கடமை", உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், "இது எனக்கு 3-வது தேர்தலாகும். சில அரசியல் கட்சியினர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெறுகின்றனர்", என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மனிதன் (55) என்பவர் பின்னோக்கி நடந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் கூறுகையில், "நான் உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1991-ம் ஆண்டுமுதல் பின்னோக்கி நடந்து வருகிறேன். இதுவரை 32 ஆண்டுகள் பின்னோக்கி பல லட்சம் கிலோ மீட்டர் நடந்து உள்ளேன். நான் எப்போது இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறேனோ அன்று முதல் முன்னோக்கி நடப்பதாக இருக்கிறேன் என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயன்பாளையத்தை சேர்ந்த ராமுவின் மனைவி தனலட்சுமி (41) என்பவர் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்தார்.

-------

4 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. சுயேச்சை வேட்பாளா்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள். ஆனால் விண்ணப்ப மனுவில் பல்வேறு திருத்தங்கள் இருந்ததால் சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது. அதன்படி அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ், நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த தனலட்சுமி, சுயேச்சை வேட்பாளர்கள் கே.பத்மராஜன், நூர்முகமது ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

------------

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றதால் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஒவ்வொருவரையும் விசாரணை நடத்திய பிறகே மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல அனுமதி அளித்தனர். அப்போது அலுவலக பணி, வங்கி பணி, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் உள்ளிட்டோரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அப்போது மெட்டல் டிடெக்டர் மூலமாக அவர்களை போலீசார் பரிசோதனை செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்