100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் சக்தி வாய்ந்த நாடாக மாறும் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு

100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் சக்தி வாய்ந்த நாடாக மாறும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2023-01-25 18:56 GMT

திருப்பத்தூர்

100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் சக்தி வாய்ந்த நாடாக மாறும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்களர் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர். அதைத்தொடர்ந்து வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வாக்களர் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 9 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பராட்டு சான்றிதழ்கள், மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் வாக்காளர்கள் ஆகியோருக்கு, கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் வாக்காளர் அடையாள எண்ணுடன் 100 சதவிதம் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய 11 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

சக்தி வாய்ந்த நாடாக

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் வாக்காளர் தங்களது தொகுதியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமரவைக்க முடியும். தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்கள் தங்களின் தொகுதியின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பார்கள். இதன் மூலம் வாக்காளர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். வாக்களிப்பதன் மூலம் சக்தி வாய்ந்த மாவட்டம், சக்தி வாய்ந்த மாநிலம் மற்றும் சக்தி வாய்ந்த நாடாக மாறும்.

வாக்களிப்பதற்கு ஜாதி, மதம், நிறம் போன்றவை தேவையில்லை. அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து இருந்தால் மட்டும் போதும். ஒரு வருடத்தில் 2 முறை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் 9,74,819 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் அடுத்து வரும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் சக்தி வாய்ந்த அரசு மற்றும் சக்தி வாய்ந்த ஜனநாயகமாக நமது நாடு மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையா, ஹரிஹரன், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட கருவூல அலுவலர் சித்ரகலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, தாசில்தார் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்