விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், டி-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி (49) என்ற பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற அவரது முன்னாள் கணவர் ஏழுமலை (52) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று வந்த நிலையில் மனைவி கனிமொழியை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் ஏழுமலை. மனைவி வேறொரு ஊரில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு முன்னாள் மனைவி கனிமொழி வந்த நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கத்திகுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.