"கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" - ஜாதகத்துடன் திருமண பேனர்
ஜாதகத்துடன் திருமண பேனர் "கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" திருமண பேனர் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது.;
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் திருமணவிழா ஒன்றில் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க என்று நண்பர்கள் வைத்துள்ள பேனர் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமண விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் பேனர்கள் வைக்கும் நிகழ்வு அதிகரித்துவிட்டது. பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டாலும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் உள்ள திருமண மகால் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக நண்பர்கள் வைத்திருந்த பேனர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு 'கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்று பெண் தேடும் படலத்தை பேனர் வடிவில் வைத்திருந்தனர்.
இதுகுறித்து மணமகனின் நண்பர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு பெண் பார்த்து வீட்டில் சளைத்துவிட்டனர். நல்ல பையனா என்று யார் பார்க்கின்றனர். வீடு இருக்கா, வேலை இருக்கா, சொத்து இருக்கா, வயசு எவ்ளோ, வங்கி இருப்பு எவ்ளோ என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, யோசித்து சொல்கிறோம் என்று நிராகரித்து விடுகின்றனர்.
அதனால் நாங்களே வித்தியாசமாக பெண் தேடுவோம் என்று இவ்வாறு படங்களை போட்டு அவரவர் ஜாதக விபரங்களை போட்டு பேனர் அடித்துள்ளோம். திருமண விழாவிற்கு வருபவர்களில் யாருக்காவது இதில் ஒருவரை பிடித்து திருமணம் நடந்தால் அதுவே எங்களுக்கு சந்தோசம்தான் என்றனர்.