கோபி அருகே பரபரப்பு வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகள் கையாடல்; வங்கி மேலாளர் கைது

கோபி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-06 21:05 GMT

டி.என்.பாளையம்

கோபி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வாடிக்கையாளர்களின் 2¾ கிலோ நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் கையாடல்

தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி டி.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் வேங்கையர் வீதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கோவை மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் டி.ஜி.புதூர் வங்கி கிளையில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 கிலோ 700 கிராம் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. இந்த நகைகளை வாடிக்கையாளர்கள் 18 பேர் தமிழ்நாடு கிராம வங்கியில் அடமானம் வைத்து ரூ.81 லட்சத்து 39 ஆயிரம் கடன் பெற்றிருந்தனர்.

மறு அடமானம்

இதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு கொடுத்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வங்கி மேலாளர் மணிகண்டன் வங்கியில் அடமானம் வைத்த நகைகளை கையாடல் செய்து அதை தன்னுடைய பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் தனியார் வங்கிகளில் மறு அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளது தெரிய வந்தது.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக நகைகளை மறு அடமானம் வைத்ததும், அதில் அனைத்து பணத்தை இழந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணிகண்டனை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'தனியார் வங்கிகளில் மறு அடமானம் வைத்த நகைகளின் ரசீதுகளை கைப்பற்றி அனைத்து நகைகளையும் மீட்டு வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை' என்றார். இதனிடையே வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாடிக்கையாளர்கள் திரண்டனர்

இதற்கிடையில் வங்கி மேலாளர் நகைகளை கையாடல் செய்த தகவல் வாடிக்கையாளர்களிடம் காட்டுத்தீ போல் பரவியது.

இதனால் பெரிய கொடிவேரி, டி.ஜி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள், தமிழ்நாடு கிராம வங்கி டி.ஜி.புதூர் கிளை முன்பு திரண்டனர்.

பரபரப்பு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கியில் நகைகள் காணாமல் போனது குறித்து வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும், காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு திருப்பி தரப்படும் எனவும் வங்கி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் சமரசம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் டி.ஜி.புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்