தேவாரம் அருகே பரபரப்பு: தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கட்டிட தொழிலாளி: டாக்டர், நர்சுகள் அலறியடித்து ஓட்டம்

தேவாரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கட்டிட தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

தேவாரம் அருகே உள்ள மல்லிகாபுரத்தை சேர்ந்தவர் விவேக் (வயது 26). கட்டிட தொழிலாளி. நேற்று இவர், தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சிமெண்டு கற்களை தூக்கிய போது, கற்களுக்கு கீேழ பதுங்கி இருந்த 3 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு அவரது கையில் கடித்தது. இதில் அவர் வலியால் துடித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது வாலிபரை கடித்த பாம்பை, அவரது நண்பர்கள் பாலித்தீன் பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனால் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தன்னை கடித்தது எந்த வகையை சேர்ந்த பாம்பு என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறினார். இந்த சம்பவத்தால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்