மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பிரிவில் நிழற்குடையில்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாணவ-மாணவிகள்
கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் பல்வேறு காரணங்களுக்காக பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சசாலையில் சர்க்கரை ஆலை பிரிவு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி உடுமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக காலை வேளையில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறுகின்றனர். இந்த பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்கக் கூட இடமில்லாத நிலை உள்ளது. இதனால் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு செல்லும் அவல நிலையால் மாணவ-மாணவிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
பயணியர் நிழற்குடை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-இந்த பகுதியில் ஒரு பயணியர் நிழற்குடை இருந்தது.அது பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. மேலும் மரத்தடியில் போடப்பட்டுள்ள இருக்கைகளும் சேதமடைந்துள்ளது.
இதனால் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாணவ- மாணவியர் மற்றும் வேலைக்கு செல்பவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை வேளைகளில் அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.