பஸ் நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.

Update: 2022-06-11 18:30 GMT

முத்தூர்

நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் தளபதி அர்ச்சுன மன்றாடியார் ஞாபகார்த்த அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

இந்த பஸ் நிறுத்தத்தில் நத்தக்காடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நகர, கிராமப்புற ஏழை, எளிய, மாணவ, மாணவிகள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸை பயன்படுத்தி அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு காலையில் வந்து பின்னர் மாலையில் வீடு திரும்பி சென்று வருகின்றனர்.இந்த பயணிகள் நிழற்குடை தற்போது வரை போதிய பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கல்வியாண்டு தொடக்கம்

இதனால் இந்த கட்டிடத்தின் வலது, இடது, பின்புற கான்கிரீட் ஜன்னல்கள் அனைத்தும் உடைந்து அந்தரத்தில் தொங்கி கீழே விழுந்துவிடும் நிலையில் ஊசலாடுகிறது. மேலும் மாணவ, மாணவிகள், பயணிகள் அமரும் டைல்ஸ் இருக்கைகள், தரைப்பகுதிகள் உடைந்து எவ்வித பயன்பாடும் இல்லாத நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் வருகிற 2022 - 2023-ம் கல்வியாண்டு நாளை (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதால் இந்த பஸ் நிறுத்தத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மீண்டும் மாணவ மாணவிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த பயணிகள் நிழற்குடை இடிந்து உடைந்து விழும் நிலையில் இருப்பதால் கடந்த 2-ஆண்டு காலமாக இதனை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்துவது இல்லை. அதற்கு மாற்றாக பஸ் நிறுத்த சாலையோரத்தில் நின்று பள்ளி முன்பு வரும் டவுன் பஸ்ஸில் ஏறி சென்று வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் இந்த பஸ் நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு அதற்கு மாற்றாக பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதிய நிழற்குடை கட்டிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்