தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
போக்குவரத்துதுறை அமைச்சராக நான் இருக்கிறேன், எங்களை வழி நடத்துபவர் முதல்-அமைச்சர். எங்களுக்கு தெரியாமல் பேருந்து கட்டண உயர்வு அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது? என்பதுதான் நீங்கள் சொல்ல வேண்டும். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது.
போக்குவரத்துதுறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறது, கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தொழிலாளர்களே கூறி வருகிறார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள். நம் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக அந்த எண்ணத்தில் தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது.
ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது, எந்த ஆம்னி பேருந்துகள் என்று என்னுடன் தெரிவித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். நாம் ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகிறோம், நம் ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் வரவுள்ளது. தற்பொழுதும் பொதுமக்களிடம் இருந்து புதிய கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளோம். தாழ்தள பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைப்படி வாங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறுகிய சாலைகளில் பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. எங்கு தேவை இருக்கிறதோ. அதை ஆய்வு செய்து அதற்கான வரவரிக்கைகள் தயாராக உள்ளது. மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும் நடவடிக்கை எடுக்கப்படும். மினி பஸ் தொடர்பாக அடுத்த கட்டமாக முழு கொள்கை வெளியிடப்படும் எங்கெங்க பேருந்து தேவை என்று மக்கள் சொல்கிறார்களோ பேருந்து இயக்குவதற்கு விண்ணப்பங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.