திருப்பூரில் நேற்று காலை முதல் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்கள் வெளியூர் புறப்பட்டதால் டவுன் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை பல்லடத்தில் இருந்து அவினாசிக்கு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்து பின்னர் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்பு நோக்கி வந்தது. பெருமாள்கோவில் அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே ஆசாமி ஒருவர் திடீரென்று குறுக்கே பாய்ந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார்.
இதில் சாலையின் கான்கிரீட் தடுப்பில் முன்சக்கரம் ஏறியது. இதனால் பஸ் இடதுபுறமாக சரிந்தது. உள்ளே இருந்த பயணிகள் அலறினார்கள். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பஸ்சின் முன்பகுதி சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.