பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி 40 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது.கண்இமைக்கும் நேரத்தில் கோவையில் இருந்து மதுரை சென்ற பஸ், பொள்ளாச்சியில் இருந்து வந்த பஸ்சின் பக்கவாட்டுப்பகுதியில் மோதியது. இதில் மதுரை சென்ற பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் அரசு பஸ் நடத்துனர் மதுரையைச் சேர்ந்த விருமாண்டி, பயணிகள் செஞ்சேரி மலையை சேர்ந்த சரவணகுமார்,இச்சிப்பட்டியை சேர்ந்த சரோஜினி, வேலுச்சாமி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும்போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.