குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த மாநகராட்சி ஊழியர்கள்

Update: 2023-08-05 11:58 GMT

வீரபாண்டி,

திருப்பூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு செல்லும் அதிக மக்கள் மங்கலம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமலும், விரிவு படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமலும் இருப்பதால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சாலையின் நடுவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குழிகள் தோண்டப்படுவதும், எரிவாயு குழாய் மற்றும் கேபிள் போன்ற பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மங்கலம் சாலை பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் சாலையின் நடுவே கடந்த 2 வாரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவருகிறது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்