எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு: பழனியில் பரபரப்பு
ஊரில் யாரும் இறக்காத நிலையில் மனித எலும்புக்கூடு எரிந்து கிடந்ததால் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவிலம்மாபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கான மயானம் ஊருக்கு அருகில் இருக்கிறது. கிராமத்தில் யாரேனும் இறந்தால் இந்த மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று அந்த மயானத்தில் எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடும், சாம்பலும் கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள், எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஒரு மாத கால இடைவெளியில் ஊரில் யாரும் இறக்காத நிலையில் மனித எலும்புக்கூடு எரிந்து கிடந்ததால் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன், கீரனூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
அதில், மனிதனின் கை, கால் மற்றும் மார்பு, விலா எலும்புகள் சாம்பலுடன் கிடந்தது. இதில், மார்பு, விலா எலும்புகள் ஏறக்குறைய எரிந்த நிலையில் இருந்தன. ஆனால் மனித மண்டை ஓடு எதுவும் இல்லை. இதனையடுத்து அங்கு கிடந்த எலும்புகளை போலீசார் சேகரித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி கோவிலம்மாபட்டி, கோரிக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சந்தேகப்படும்படியான வாகனம் ஊருக்குள் வந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கோவிலம்மாபட்டி மயானத்தில் கிடந்தது மனித எலும்புகள் தான். ஆனால் உடல் முற்றிலும் எரிந்துள்ளது. எலும்புகளின் அளவை வைத்து பார்க்கும்போது சுமார் 20 வயதுடைய மனிதனாக இருக்கலாம். ஆனால் அது ஆணா?, பெண்ணா? என்பது தெரியவில்லை.
அதாவது, எங்கேனும் வைத்து கொலை செய்துவிட்டு இங்கு வந்து போட்டு எரித்து இருக்கலாம். கிடைத்த எலும்புகளை ஆய்வுக்காக மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அதன் முடிவில் இறந்தது ஆணா, பெண்ணா? என்பது தெரிய வரும். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.