கோவில்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் கைவரிசை: ஒரே நாளில் 3 வீடுகளில் துணிகர கொள்ளை

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள 3 வீடுகளில் ஒரே நாளில் துணிகரமான முறையில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;

Update: 2022-09-12 16:48 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள 3 வீடுகளில் ஒரே நாளில் துணிகரமான முறையில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூட்டிய வீடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள லட்சுமி மில் மேலக்காலனியில் வசித்து வருபவர் ராமசுப்பு மகன் சந்திரசேகர் (வயது 61). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். சந்திரசேகர் வீட்டை ்பூட்டி விட்டு கோவையில் படிக்கும் மகளை பார்க்க தனது குடும்பத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

கொள்ளை

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் அலமாரியும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்சுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மேலும், வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள், வெள்ளி குங்கும சிமிழ் மற்றும் சில வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி ஒரு பையில் எடுத்து சென்று அங்குள்ள வாழை மரத்திற்கு கீழ் மறைத்து வைத்து இருந்தனர். பின்னர் வந்து அதை எடுத்துச்செல்லலாம் என நினைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வெள்ளிப்பொருட்கள் மட்டும் மீட்கப்பட்டன.

மேலும் 2 வீடுகள்

இதே போன்று அந்த பகுதியில் உள்ள கேபிரியேல் என்பவர் வீட்டிலும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால், அங்கு என்ன பொருட்கள் திருட்டு போய் இருக்கிறது? என தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகு தான் கொள்ளை பற்றிய விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

இதேபோல் அருகில் உள்ள இனாம் மணியாச்சி சர்வீஸ் சாலையில் தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிப்பவர் ராமசாமி மகன் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.54 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.

வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூட்டிய வீடுகளில் துணிகரமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் நிலையம் பின்புறம் இருக்கும் வீடுகளில் ஒரே நாளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்