இலக்கை நோக்கி சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மித்ராவயல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மித்ராவயல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 60 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. அப்போது மாட்டுவண்டிகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றன. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை பீர்க்கலைக்காடு எஸ்.பி.ஆர். பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை மேலூர் குட்டிப்புலி வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும் பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் கலந்து கொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கொங்கராம்வயல் கார்த்திக் பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை கொத்தமங்கலம் சேகர் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை பாப்பாக்கோட்டை பாக்கியம் வண்டியும், 2-வது பரிசை மணச்சை புகழேந்தி வண்டியும், 3-வது பரிசை சாக்கோட்டை தம்பா வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்து கொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. இதில் முதல் பிரிவில் முதல் பரிசை வடக்கூர் நண்பன் கோழிப்பண்ணை வண்டி மற்றும் கொங்கராம்வயல் கார்த்திக் பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை பரளி செல்வி வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மொபைல்ஸ் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை பேராவூரணி லிங்கேஷ் வண்டியும், 2-வது பரிசை நாட்டாணி சூர்யா வண்டியும், 3-வது பரிசை கானாடுகாத்தான் சோலையாண்டவர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.