கழிவு நீர் சேகரிப்பு நிலையமாக மாறிவாரும் புக்குளம் ஏரி

தியாகதுருகத்தில் கழிவு நீர் சேகரிப்பு நிலையமாக மாறிவாரும் புக்குளம் ஏரி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;

Update: 2022-07-10 15:48 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சுமார் 250-ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. தியாகதுருகம் பகுதியில் உள்ள ஓட்டல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரதான கால்வாய் மூலம் புக்குளம் பெரிய ஏரியை சென்றடைகிறது. இதனால் ஏரியில் கழிவுநீர் நிரம்பி கழிவு நீர் சேகரிப்பு நிலையமாக மாறி வருகிறது. மேலும் அருகில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்று மூலம் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்தநிலையில் புக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீரும், மாலை நேரங்களில் கிணற்றிலிருந்து அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்படும் தண்ணீரும் ஒரே குழாய் மூலம் வினியோகம் செய்யப்படுவதால் அதை பருகிய அப்பகுதியை  சேர்ந்த சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அங்கு முகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் கிணற்றில் இருந்து நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

புக்குளம் பகுதியில் உள்ள கால்நடைகள் பெரிய ஏரியில் உள்ள கழிவு நீரை குடிப்பதால் அைவ கோமாரி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுவதாகவும், ஏரியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் புக்குளத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை உள்ளதாகவும் பொதுமக்களும், விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புக்குளம் பெரிய ஏரியை நேரில் ஆய்வு செய்து ஏரியில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலனைகருத்தில் கொண்டு தியாகதுருகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்