புகழூர் வாய்க்காலை தூர்வார வேண்டும்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

புகழூர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-05-26 19:17 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 84 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில் மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 91 ஆயிரத்து 127 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

வாய்க்காலை தூர்வார கோரிக்கை

கூட்டத்தில், வடசேரியில் பள்ளி வளாகத்தில் நடுவில் தாழ்வாக செல்லும் மின்சார வழித்தடத்தினை மாற்றி அமைக் வேண்டும். ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும். அதே பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை பராமரித்து தர வேண்டும்.

கூனம்பட்டி கிராம பகுதியில் அனைத்து வீட்டிற்கும் முறையான குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். புகழூர் வாய்க்காலை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தூர்வாரி கொடுக்க வேண்டும்.

சீரான குடிநீர்

கிருஷ்ணராயபுரம் வழியாக ரெங்கநாதபுரம் செல்லுவதற்கு இணைப்பு பாலம் அமைத்து கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும். வளையல்காரன்புதூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி கொடுக்க வேண்டும். கீழவெளியூர் கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்வதற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும். பணிக்கம்பட்டி பகுதியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிளை நூலகங்கள் கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும்.

உள்வீரராக்கியம் பகுதியில் ஏரியில் விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஈசநத்தம் பகுதியில் பஸ் செல்லும் வழித்தடத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும். கருங்கலாப்பள்ளி பகுதியில் நீர்நிலை தேக்க தொட்டியில் இருந்து தினமும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

தேவர்மலை பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்