"மேகதாதுவில் அணை கட்டுவதைபா.ஜனதா தடுத்து நிறுத்தும்": அண்ணாமலை
“மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும்”: அண்ணாமலை;
"தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும்" என்று தூத்துக்குடியில் நேற்று அண்ணாமலை கூறினார்.
ேபட்டி
தூத்துக்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஏற்கனவே துபாய் சென்று வந்தார். இதுவரை அதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. பா.ஜனதா பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. ரூ.1,000 கோடி ஒப்பந்தம் செய்த ஒரு நிறுவனத்தின் முகவரியில் உதயநிதி பவுண்டேசன் முகவரியும் உள்ளது. இதனால் உதயநிதி பவுண்டேசன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேகதாது அணை
நான் கர்நாடகாவுக்கு இணை தேர்தல் பொறுப்பாளராக சென்றபோது, பத்திரிகையாளர் சந்திப்பில் மேகதாது அணை கட்டக்கூடாது என்று கூறினேன். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்தோ, தமிழக காங்கிரசிடம் இருந்தோ எந்த கண்டனமும் வரவில்லை. முல்லை பெரியாரிலும் இதே பிரச்சினைதான் நடந்தது.
தமிழகத்தின் உரிமையை முதல்-அமைச்சர் தொடர்ந்து விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறார். தமிழக அரசால் தடுக்க முடியாவிட்டால் மேகதாது அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும். இதற்காக இங்கிருந்து, மேகதாது நோக்கி தமிழக பா.ஜனதா நடைபயணம் கூட மேற்கொள்ளும். அமைச்சர் பொன்முடி, கவர்னர் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி உள்ளார். துணைவேந்தர்களை எப்போதும் கவர்னர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். தற்போது அரசியல் செய்கிறார்கள். தமிழக அரசு எப்போது திருந்த போகிறது என்று தெரியவில்லை. இவர்களின் மனப்பான்மையால் தமிழில் 36 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீட்டை வளர்க்க வேண்டும். தென்மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை நாம் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தற்போது காப்பருக்காக சீனாவை நோக்கி கைட்டி நின்று கொண்டு இருக்கிறோம். மூடப்பட்ட ஆலைகளுக்கு சலுகைகள் வழங்கி நிலைத்திருக்க வைக்க வேண்டும்.
ஜூலை 9-ந்தேதி ஊழல் எதிர்ப்பு நடைபயணம் தொடங்குகிறேன். இதனால் ஜூலை முதல்வாரத்தில் ஊழல் தொடர்பான 2-வது பட்டியல் வெளியிடப்படும். தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர்கள் கையில் இருப்பது போன்றுதான் உள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தைரியம் கிடையாது
ராகுல்காந்தி அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவரை வரவேற்றவர்களுக்கு பாகிஸ்தான் அடையாளம் உள்ளது. அங்கு இந்திய வம்சாவளியினரிடம் நடந்த கூட்டத்தில், தேசிய கீதத்தை அவமதிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் பாகிஸ்தான் காரர்களாகத்தான் இருப்பார்கள்.
அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சி எங்கள் வேலை இல்லை. அதனை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. நான் வீடுகட்டுவதாக புகார் கூறுகிறார்கள். என்னை கைது செய்ய முடிந்தால் கைது செய்யுங்கள். தேவை இல்லாமல் மிரட்டிக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் ஓட்டைப்படகு என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். அவர்களின் விவரங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். தி.மு.க. அமைச்சர்களுக்கு தைரியம் கிடையாது. காலம் அவர்களை அழிப்பது உறுதி. தற்போது அந்த வேலையை நாங்கள் எடுத்து உள்ளோம். என் மீது பல மானநஷ்ட வழக்கு போட்டு உள்ளார்கள். தைரியம் இருந்தால் கோர்ட்டுக்கு வாருங்கள். தி.மு.க. அழிவு தமிழக மண்ணில் கண்டிப்பாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------