சூளகிரி அருகே தாசனபுரத்தில்600 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழாமாடுகள் முட்டி 20 பேர் காயம்
சூளகிரி:
சூளகிரி அருகே தாசனபுரத்தில் 600 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடந்தது. இதில் மாடுகள் முட்டி 20 பேர் காயம் அடைந்தனர்.
எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தாசனபுரத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருதுவிடும் விழா நடைபெற்றது.
இதில் சூளகிரி, அத்திமுகம், பேரிகை மற்றும் மாலூர், மாஸ்தி போன்ற கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் நன்கு அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவை 10 மணி வரை மட்டுமே நடத்த போலீசார் அனுமதித்திருந்தனர்.
20 பேர் காயம்
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கூடுதலாக 30 நிமிடங்கள் எருதுவிடும் விழா நடத்தப்பட்டது. இதையடுத்து மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள், மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
விழாவையொட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.