குலசேகரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கிய சகோதரர்கள்; தம்பி பலி

குலசேகரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி சகோதரர்கள் படுகாயமடைந்தனர். இதில் தம்பி பலியானார். இந்த சோக சம்பவம் தாயின் கண் எதிரே நடந்தது.;

Update: 2023-03-13 18:45 GMT

குலசேகரம்

குலசேகரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி சகோதரர்கள் படுகாயமடைந்தனர். இதில் தம்பி பலியானார். இந்த சோக சம்பவம் தாயின் கண் எதிரே நடந்தது.

1-ம் வகுப்பு மாணவன்

குலசேகரம் பொன்மனை அருகே உள்ள சமாதிநடையைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருடைய மனைவி நந்தினி. வெளிநாட்டில் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சதீஸ்குமார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன்கள் சபரிநாத் (வயது 9), சூரியநாத் (7). குலசேகரம் படர்நிலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சபரிநாத் 4-ம் வகுப்பும், சூரியநாத் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்துக்கு தனியார் வேனில் செல்வது வழக்கம்.

தற்போது பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில் இந்த மாணவர்களுக்கு நேற்று பிற்பகலில் வகுப்புகள் நடைபெற்றது. அதன்படி நேற்று 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் அதே வேனில் வீடு திரும்பினர்.

வேனில் அடிபட்டு சாவு

வேனில் இருந்து கீழே இறங்கிய சபரிநாத், சூரியநாத் ஆகியோர் அந்த வேனின் முன்பக்கம் வழியாக சாலையை கடக்க முயன்றனர். இதனை கவனிக்காத டிரைவர் திடீரென வேனை இயக்கியுள்ளார். இதில் 2 பேரும் எதிர்பாராதவிதமாக வேனின் சக்கரத்தில் சிக்கி கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இருவரும் உடல்நசுங்கி உயிருக்கு போராடினர்.

மகன்கள் 2 பேரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அங்கு காத்திருந்த அவருடைய தாயார் நந்தினி, இந்த கோர விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கண்முன்னே 2 மகன்களும் ரத்த காயங்களுடன் துடிதுடிக்கும் சம்பவத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சூரியநாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதே சமயத்தில் சபரிநாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான சூரியநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து தொடர்பாக குலசேகரம் போலீசார் வேன் டிரைவரான பொன்மனையை சேர்ந்த ஜார்ஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.

வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்