அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள்

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள்;

Update: 2022-08-26 11:42 GMT

கோவை

கோவையில் நடந்த சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சொத்து தகராறு

கோவை கே.கே.புதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருடைய மகன்கள் அழகு (வயது 55), சேகர் (47). இவர்கள் 2 பேரும் மனைவியை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தனர். இதில் சேகர் மேட்டுப்பாளையம் சாலையில் அயனிங் கடை நடத்தி வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சேகர், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டபோது வேலை இல்லாததால் சேகருக்கு மது குடிக்க பணம் கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது தாயாரிடம், வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கூறி உள்ளார். அப்போது அண்ணன்அழகு, சேகருக்கு குடிபழக்கம் இருப்பதால் வீட்டை அவருடைய பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குத்திக்கொலை

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி, அதேப்பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அங்கு அழகு மற்றும் சேகரும் சென்று இருந்தனர். பின்னர் 2 பேரும் வீடு திரும்பினார்கள். அப்போது சேகர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு சென்றதும், சொத்து தொடர்பாக மீண்டும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சேகர், வீட்டுக்குள் சென்று அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து அழகுவின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆயுள் தண்டனை

பின்னர் இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலு தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்