குடும்ப பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தி மைத்துனர் படுகொலை

திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தி மைத்துனர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2023-07-20 17:23 GMT


திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கத்தியால் குத்தி மைத்துனர் படுகொலை செய்யப்பட்டார்.

குடும்ப பிரச்சினை

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

பாண்டியனின் மூத்த மகளான சுகுணாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராம்ஜி (வயது 30) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பாண்டியன் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்ஜி திருவண்ணாமலையில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை சுகுணாவுக்கும், ராம்ஜிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனை சுகுணாவின் தாயார் விஜயா தட்டி கேட்டுள்ளார். அப்போது விஜயாவை ராம்ஜி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த விஜயாவின் இளைய மகன் பரணி (23) என்பவர் வெளியே இருந்து வீட்டிற்கு வந்து ராம்ஜியிடம் தட்டி கேட்டுள்ளார்.

வாலிபருக்கு கத்திக்குத்து

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி கத்தியால் பரணியை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தடுக்க வந்த விஜயாவையும், சகோதரி கல்கியையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

அதற்குள் அங்கிருந்து ராம்ஜி தப்பியோடி விட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பரணியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த விஜயா மற்றும் கல்கியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொழிலாளிக்கு வலைவீச்சு

அங்கு விஜயாவிற்கும், கல்கிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராம்ஜியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்