தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன்-தம்பி
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட அண்ணன்-தம்பியை மணலூர்பேட்டை போலீசார் மீட்டனர்
திருக்கோவிலூர்
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாத்தனூர் அணை வேகமாக நிரம்பியதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்ணன்-தம்பி
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையை சேர்ந்த வினோத்(வயது 32), இவரது அண்ணன் ரவி(42) மற்றும் இருவரின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 10 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உள்பட 20 பேர் பஸ்சில் திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடவந்தனர். சாமி தரிசனத்து பின்னர் அவர்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக மணலூர்பேட்டைக்கு வந்தனர்.
அப்போது அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை கண்டதும் குளித்து செல்ல முடிவு செய்த அவர்கள் மாலை 5 மணியளவில் மணலூர்பேட்டை தரைப்பால பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். இதில் வினோத் மற்றும் ரவி ஆகியோர் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
அந்த வேளையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். இதைப்பார்த்து கரையோரம் நின்று குளித்துக்கொண்டிருந்த அவர்களின் உறவினர்கள் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றில் இறங்க அவர்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன்-தம்பி இருவரும் ஆற்றின் நடுவில் இருந்த ஆழ்துளை கிணற்று தொட்டி அருகே சென்றதும் அதை லாவகமாக பிடித்துக்கொண்டு தவித்தனர்.
போலீசார் மீட்டனர்
பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து ஆபத்து மற்றும் பெருவெள்ள காலங்களின்போது பயன்படுத்தப்படும் நீண்ட கயிற்றின் உதவியோடு காற்று நிரப்பப்பட்ட லாரி டியூப்களின் மூலம் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் தவித்துக்கொண்டிருந்த அண்ணன்-தம்பி இருவரையும் மீட்டு கரைக்கு வந்தனர். உயிர் பிழைத்த ரவி, வினோத் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் மணலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.