வழிப்பறி வழக்கில் அண்ணன்-தம்பி கைது; 5 பவுன் நகை பறிமுதல்
வழிப்பறி வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.;
சிறுகனூர் அருகே உள்ள ஸ்ரீபுரம்புதூர் வடக்கு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 39). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்து இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று தச்சங்குறிச்சி அருகே சிறுகனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் தெரணிபாளையம் நடுத்தெருவைச் சேர்ந்த சதாசிவம் மகன்கள் தர்மராஜ் (22), பழனிச்சாமி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில், பரமேஸ்வரியிடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மண்ணச்சநல்லூர், புலிவலம், சிறுகனூர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.