தாயிடம் தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
வாலாஜாபாத் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி அடித்து கொன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கைது செய்தனர்.;
தாயுடன் தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா, திம்மையன்பேட்டை ஊராட்சி, கீழ் தெருவில் வசிப்பவர் வடிவேலு (வயது 48). இவர் தன் தாய் தெய்வானை (75) என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவரது அண்ணன் சரவணன் (54). இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சரவணன் குடித்துவிட்டு தம்பி வடிவேலு வீட்டுக்கு சென்று தாய் தெய்வானையிடம் தகராறு செய்து உள்ளார். குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த சரவணனை தம்பி வடிவேலு தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
அடித்துக் கொலை
கைக்கலப்பில் சரவணன், தம்பி வடிவேலுவின் கையை கடித்து காயப்படுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக அண்ணனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சரவணன் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் உயிரிழந்த சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கட்டையால் அடித்துக் கொலை செய்த தம்பி வடிவேலுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதை தகராறு காரணமாக கோபத்தில் தம்பியே அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.