நம் கல்வி முறையை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர்-கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

‘பிராமணர்கள் அதிகம்பேர் ஆசிரியர்களாக இருந்ததால், நம் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் குறிவைத்து அழிக்க முற்பட்டனர்' என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Update: 2024-06-18 03:30 GMT

சென்னை,

வக்கீல் பி.ஜெகன்நாத் எழுதிய 'சென்னையின் முதல் பூர்வீகக் குரல் - கஜுலு லட்சுமிநரசு செட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது நமது கல்வி முறைப்படி கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.ஆரியர்களைவிட சூத்திரர்களே நிறைய பேர் படித்தனர் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. ஆசிரியர்களில் பெரும்பாலான பேர் பிராமணர்களாக இருந்தனர். அதனால்தான் அவர்களை ஆங்கிலேயர்கள் குறிவைத்து நம் கல்வி முறையை அழிக்க முற்பட்டனர்.

நம் கல்வி முறையை மட்டுமின்றி நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டையும் அழிக்க அவர்களது கல்வியைப் பயன்படுத்தினர். அந்தக் காலக்கட்டத்தில்தான் கஜூலு லட்சுமிநரசு செட்டி சென்னையில் மெட்ராஸ் கிரெசென்ட் என்ற பத்திரிகையை தொடங்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அவரைப் பற்றிய மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வெளிவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்