குறுகலாக காட்சி அளிக்கும் பாலம் வாகன ஓட்டிகள் அவதி
வடபாதிமங்கலம்-புனவாசல்- திருவாரூர் சாலையில் உள்ள பாலம் குறுகலாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.;
வடபாதிமங்கலம்-புனவாசல்- திருவாரூர் சாலையில் உள்ள பாலம் குறுகலாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திருவாரூர் சாலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்வதற்கு சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் உள்ளது.
இதனால் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
குறுகலான பாலம்
இந்த சாலையில் புனவாசல் என்ற இடத்தில் அன்னமரசனாற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் வந்தால் எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால், மிகவும் சிரமமாக உள்ளது என வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சேதம் அடைந்த குறுகலான பாலத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வலுவிழந்த பாலம்
இது குறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த குமரன் கூறியதாவது:-
மிகவும் பழமையான பாலம் என்பதால், வலுவிழந்து காணப்படுகிறது. பாலம் புதிதாக கட்டப்பட்ட கால கட்டத்தில் வாகன போக்குவரத்து என்பது மிகவும் குறைவு. இதனால் பாலத்தை குறுகலாக கட்டியிருக்கலாம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் வாகனங்களும் அதிகமாகி விட்டது. ஏராளமான கனரக வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் எதிர் எதிரே வாகனங்கள் வர நேரிட்டால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
சில சமயங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பாலத்தை கடக்கும் போது விபத்துகளும் ஏற்படுகிறது. அதனால், குறுகலான பாலம் உள்ள இடத்தில் அகலமான பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒத்தையடி பாதை போல...
கூத்தாநல்லூரை சேர்ந்த அக்பர் அலி:-
திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் இதுவாகும். 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
இந்த நிலையில் குறுகலான பாலத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலம் அமைந்துள்ள பகுதி ஒத்தையடி பாதைபோல காட்சி அளிக்கிறது. எனவே உடனடியாக புதிதாக அகலமான பாலத்தை கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.