ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
போடிப்பட்டி,
சுற்றுலாத் தலங்கள்
மடத்துக்குளத்திலிருந்து குமரலிங்கம் வழியாக பழனி, அமராவதி, ஆனைமலை, திருமூர்த்திமலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. நீலம்பூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட கிராமப் பகுதிகளை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.
மேலும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் மடத்துக்குளம் பகுதியில் ரெயில் தண்டவாளம் குறுக்கிடுகிறது.
ஒவ்வொரு முறை இந்த வழித்தடத்தில் ெரயில் வரும்போதும் இந்த ரெயில்வே கேட் மூடப்படுகிறது.அதுபோன்ற நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
மாணவ மாணவிகள்
பயணிகள் ரெயில் வரும் நேரங்களில் மட்டுமல்லாமல் எதிர்பாராத நேரங்களில் சரக்கு ரயில், சோதனை ஓட்டம் போன்றவற்றின் போதும் ரெயில்வே கேட் மூடப்பட்டு விடுகிறது. ரெயில் சென்றவுடன், கேட் திறக்கப்படும் போது வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயலும்போது நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் உரிய நேரத்தில் சென்று சேர முடியாத நிலை உள்ளது.எனவே இந்த ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.