திருமணமான 10 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-போலீசுக்கு தெரியாமல் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு

தேவூர் அருகே திருமணமான 10 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-15 22:39 GMT

தேவூர்:

திருமணம்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஊராட்சி நல்லங்கியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 27). இவர் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஜீவானந்தத்திற்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா காடப்பனூர் ஊராட்சி குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்த குப்புசாமி மகள் விமலாதேவி (20) என்பவருக்கும் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

தற்கொலை

திருமணத்துக்கு பிறகு விமலாதேவி தனது கணவர் ஜீவானந்தம் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது விமலாதேவி மின்விசிறி கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, விமலாதேவியின் உடலை அவரது வீட்டாரும், கணவர் வீட்டாரும் உறவினர்களுடன் கொட்டாயூர் ஆத்துகாடு சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தேவூர் போலீசார் விமலாதேவியின் உடலை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலா தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணத்துக்கு முன்பு விமலாதேவி யாரையாவது காதலித்தாரா? அல்லது கட்டாய திருமணம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விமலாதேவிக்கு திருமணமாகி 10 நாட்களே ஆவதால் சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 10 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்