தந்தையை கொலை செய்த கொத்தனார் கைது
கீழப்புலியூரில் தந்தையை கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.;
மது போதையில்...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் காலனி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 59), விவசாயி. இவருடைய மனைவி அஞ்சலை. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அஞ்சலை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருந்து வருகிறார். திருமணமாகாத மூத்த மகன் சதீஷ் (28). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். மது குடிக்கும் பழக்கமுடைய சதீஷ் நேற்று மாலை மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சக்கரவர்த்திக்கும், சதீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தனது தந்தை சக்கரவர்த்தியை கடப்பாரையால் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயமடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
கைது
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசை கைது செய்தனர். பின்னர் சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.