லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டரை மடக்கி பிடித்த மதுரை சி.பி.ஐ. அதிகாரிகள்

கரூரில் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டரை மதுரை சி.பி.ஐ. அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.;

Update: 2022-06-25 19:28 GMT

மதுரை,

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை மத்திய புலனாய்வுத்துறையில் (சி.பி.ஐ.) புகார் அளித்தார். அதில் நான் கம்பிவேலி உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடங்குவதற்கு ஜி.எஸ்.டி. ஆர்.சி. எண் வாங்குவதற்கான இணையதளத்தில் விண்ணப்பித்தேன். அதைத்தொடர்ந்து எனக்கு கரூர் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து ஒருவர் போன் செய்து, நீங்கள் தொழில் தொடங்கும் இடத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன்படி நான் கரூரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினேன்.

அப்போது ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் சுபேசிங் என்பவர் இடத்தை பார்க்க என்னுடன் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவரை அலுவலகம் சென்று சந்தித்த போது ஜி.எஸ்.டி. எண் கொடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி வற்புறுத்தினார். எனக்கு பணம் கொடுக்க விருப்பமில்லை என்பதால் மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் செய்தேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள், அய்யப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜி.எஸ்.டி. அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அய்யப்பன் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கரூரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.அப்போது ஜி.எஸ்.டி இன்ஸ்பெக்டர் சுபேசிங் அவரிடம் இருந்து பணத்தை வாங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதன் பின்னர் சுபேசிங்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்