துணை வேந்தர் பதவிக்கு லஞ்சம்: பன்வாரிலால் புரோகித் தாமதமாக கண்டுபிடித்துள்ளார் - அமைச்சர் மனோ தங்கராஜ்
அவர் கவர்னராக இருந்தபோது தான் துணை வேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.;
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகாரங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தான் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது.
மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகம் வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. ஆனால் அதை மீறுவது கண்டனத்துக்குரியது. பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்களிலேயே இந்தி திணிப்பையும், அதிகார குவியலையும் எதிர்த்து பலர் பேசி வருகிறார்கள்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தி பேசி வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலை நீட்டி வருவதாக அவர் கூறுகிறார். ஏன் தலையை மட்டும் நுழைக்கிறார்கள். முழு உடலையும் நுழைக்கட்டும். ஆனால் இங்கு எதுவும் எடுபடாது. ஏனெனில் தற்போது மக்கள் மதவெறிக்கு பின்னால் இல்லை. அதிலும் அவர்கள் பேசுவது ஆன்மிகம் அல்ல. ஆன்மிகம் என்பது அன்பை உள்ளடக்கியது.
அறத்தை முன் வைக்க கூடியது. இந்த அன்பு, அறத்துக்கு நேர் எதிராக வெறுப்பை அவர்கள் பேசி வருகிறார்கள். நிறுவனம் ஆக்கப்பட்ட மதங்களின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு மாற்று மதங்களை கொச்சைப்படுத்துவது, மக்களிடம் மத உணர்வை தூண்டுவது ஆன்மிகம் ஆகாது.
கவர்னர் பதவி வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. கவர்னர் பதவி குறித்து அண்ணா அப்போதே விமர்சித்தார். கவர்னர் பதவி மாநிலங்களுக்கு உதவியாக இருந்ததாக வரலாறு குறைவு. மாறாக தலைவலியாக தான் இருந்து வருகிறது. அதிலும் இப்படிப்பட்ட நபர்கள் தலை வலியை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 40 முதல் 50 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்கப்பட்டதாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். ஆனால் அவர் அதை தாமதமாக கண்டுபிடித்துள்ளார். அவர் கவர்னராக இருந்தபோது அவர் தலைமையில் தான் துணை வேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டன. அப்போது நற்சான்றிதழை அவரே வழங்கினார்.
ஏன் அப்போதே அதை பேசி தடுக்கவில்லை? பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பதற்கு முன்பு இனி தமிழக மீனவர்கள் யாரும் சுடப்பட மாட்டார்கள் என்று கூறினார். ஆனால் அவர் கூறியது எதையுமே செய்யவில்லை. மீனவர்கள் பாதுகாப்பு குறித்து பேசினார்கள். தாமரை மாநாடு நடத்தினார்கள். ஆனால் தற்போது எதுவுமே நடக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள். அதை தி.மு.க. கட்டாயம் எதிர்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.