குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்: பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவிக்கு 2 ஆண்டு சிறை
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது;
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஊராட்சி மன்ற தலைவியாக சந்திரா (58) இருந்தார். குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சந்திரா கூறியுள்ளார். இதையடுத்து லஞ்சம் கேட்டது தொடர்பாக தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் செல்வராஜ் கூறினார். பின்னர் ரூ.2 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி செல்வராஜிடம் கொடுத்தனர். அவர் அந்த பணத்தை பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று ஊராட்சி மன்ற தலைவி சந்திராவிடம் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்திராவை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோபிநாதன் இன்று தீர்ப்பளித்தார். அதில் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.